விட்டுக்கொடுக்க மறுக்கும் ராமதாஸ்... 9 மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி திடீர் ஆலோசனை
- தந்தை ராமதாசுக்கு வயதாகி விட்டதால் அவர் ஓய்வு எடுக்க வேண்டும்.
- கவுரவம் பட பாணியில் வீட்டுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் எதிர்த்து வருகிறார்கள்.
சென்னை:
வட மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு தனி செல்வாக்கு உள்ளது. இந்த செல்வாக்கை மனதில் வைத்துதான் தேர்தல் நேரங்களில் கூட்டணி அமைப்பதற்கும் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன.
அதிலும் குறிப்பாக வட மாவட்டங்களில் கூட்டணிகளின் வெற்றி, தோல்விக்கு காரணமாக இருப்பது பா.ம.க.தான். அந்த கட்சிக்கான வாக்கு வங்கியும் அப்படியே உள்ளது.
சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கட்சி தொண்டர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரிடம் தான் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை இருவரையும் எதிர்பார்க்கிறார்கள்.
மாநில தலைவராக இருந்து கட்சியை வழி நடத்தும் அன்புமணி கட்சிக்கு இளரத்தம் என்ற ரீதியில் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்து நடத்த வேண்டும் என்று விரும்புகிறார். இதற்காக அவர் நேற்று 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தந்தை ராமதாசுக்கு வயதாகி விட்டதால் அவர் ஓய்வு எடுக்க வேண்டும். வேண்டுமானால் கட்சிக்கு ஆலோசனை வழங்கட்டும். நிர்வாகிகள் நியமனங்களில் தலையிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்.
ஆனால் அதற்கு ராமதாஸ் உடன்படவில்லை. தான் தொடங்கிய கட்சி. தான் விரும்பும் வரை தன் விருப்பப்படிதான் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
இருவரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் கவுரவம் பட பாணியில் வீட்டுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் எதிர்த்து வருகிறார்கள்.
வன்னியர்கள் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்தும் போராடியும் வருவது பா.ம.க. எனவே வன்னியர்களை பொறுத்தவரை இவர் மீதும் தீவிர பற்றோடு இருக்கிறார்கள்.
ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பானு, பு.த.அருள்மொழி போன்ற மூத்த நிர்வாகிகள் பலரும் இந்த பிரச்சனைக்கு மனம் ஒத்து இருவரும் முடிவெடுக்க வேண்டும் என்று இருவரையும் சந்தித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தொண்டர்களை பொறுத்தவரை விரைவில் நல்ல சேதி வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.