தமிழ்நாடு

மக்களை சந்திக்க தயாராகும் விஜய்- தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகிறது

Published On 2025-01-04 03:15 GMT   |   Update On 2025-01-04 03:15 GMT
  • மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை விஜய்யிடம் புஸ்சி ஆனந்த் வழங்கியுள்ளார்.
  • தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவடைகிறது.

சென்னை:

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக கட்சி மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டுக்கு கூடிய கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதேநேரத்தில், தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற இருக்கும் நிலையில், கட்சிக்கு இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பு வகித்தவர்களே தற்போது மாவட்ட தலைவர்களாக தொடர்ந்து வருகிறார்கள். எனவே கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க கடந்த சில மாதங்களாக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து வந்தது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு தற்போது மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டம் பிரிக்கப்பட்டு, 117 மாவட்ட செயலாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை விஜய்யிடம் புஸ்சி ஆனந்த் வழங்கியுள்ளார். இந்த பட்டியலுக்கு விஜய் விரைவில் ஒப்புதல் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

மாவட்ட செயலாளர்கள் பட்டியலில் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க இடங்களை ஒதுக்க வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியான பிறகு, வட்டார, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தை பொங்கல் அன்று இந்த பட்டியல் வெளியாகலாம் என்று தெரிகிறது.

அதனை தொடர்ந்து கட்சியின் முதல் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவடைகிறது. அதன்பிறகு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

Tags:    

Similar News