அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வன்கொடுமை சம்பவம்- FIR வெளியீடு
- சிகிச்சைக்கு பின் ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தந்தையின் எண்ணை எடுத்து வீடியோவை அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறையில் அடைக்க ஞானசேகரனை அழைத்து சென்றபோது தப்பிக்க முயன்றால் கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் F.I.R. (முதல் தகவல் அறிக்கை) வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கடந்த திங்கட்கிழமை மாணவருடன் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன், பேராசிரியரிடம் காண்பித்து டி.சி.யை தரவைப்பேன் என ஞானசேகரன் மிரட்டியதாகவும் மேலும் செல்போனில் இருந்த தந்தையின் எண்ணை எடுத்து வீடியோவை அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவியும், மாணவனும் ஞானசேகரனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். இதை அடுத்து மாணவனை செல்லுமாறு கூறியுள்ளார். மாணவன் சென்றதும் மாணவி எவ்வளவு கெஞ்சியும் விடாமல் வலுக்கட்டாயமாக ஞானசேகரன் துன்புறுத்தியதாகவும் F.I.R-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.