அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்- அதிமுக கேவியட் மனு தாக்கல்
- மாணவி வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது.
- அதிமுக சார்பில் வழக்கறிஞர் வரலட்சுமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மாணவியிடம் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதனை போலீ சார் மறுத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன.
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் 2-வது நபர் யார்? என்பது பற்றி உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று உள்ளது. இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மாணவி வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் வழக்கறிஞர் வரலட்சுமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்," எஸ்ஐடி அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும்போது தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும்." என குறிப்பிடப்பட்டுள்ளது.