விளம்பரம் செய்வதிலேயே முக்கியத்துவம்- அரசை சாடிய அண்ணாமலை
- மண்டவாய் புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் அண்ணாமலை ஆய்வு செய்தார்.
- மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் உள்ள பாதிப்புகள் குறித்து அரசு கவனம் கொள்ள வேண்டும்.
மரக்காணம்:
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த 1-ந் தேதி புதுவை-மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் ஏற்பட்ட மழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
அங்குள்ள உப்பளங்கள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. மரக்காணத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை அவர் மரக்காணம் வந்தார். மரக்காணத்தில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த உப்பளங்கள் நீரில் மூழ்கி கிடக்கிறது. அதனை அண்ணாமலை பார்வையிட்டார். எக்கியார்குப்பம், கூனிமேடு பகுதிகளையும் பார்த்தார். வண்ணாரப்பாளையம்-அச்சங்குப்பம் இடையே சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளது. அதனையும் அண்ணாமலை பார்வையிட்டார். மண்டவாய் புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் அவர் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
மிகவும் கொஞ்சமாக மழை பெய்த சென்னையை மட்டுமே அரசு படம் போட்டு காட்டுகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் உள்ள பாதிப்புகள் குறித்து அரசு கவனம் கொள்ள வேண்டும். முதலமைச்சர், துணை முதல்வரை விளம்பரம் செய்வதிலேயே முக்கியத்துவம் செலுத்தப்படுகிறது என்றார்.