11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு
- தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும்.
- இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.
வங்கக்கடலில் உருவாகி தமிழக பகுதிகளை கடந்து சென்ற தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழையை கொடுத்தது. தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுப்பகுதியாக வலு இழந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவி வந்தது.
நேற்று லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவி வந்த நிலையில், இது இன்று மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக மேலும் வலு குறைந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றுவிடும் என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகும் என்றும், அதன் காரணமாக தமிழகத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும் நேற்று தெரிவித்தது.
அதன்படி இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதனைத் தொடர்ந்து வரும் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.
இந்நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.