திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலில் மகாதீபம் ஏற்றம்
- 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட செப்பு கொப்பறையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
- பக்தர்கள் அளித்த நெய் மற்றும் எண்ணெய் கொண்டு மலைக்கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உலக பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 4 மலை குன்றுகள் 4 வேதங்களாக அழைக்கப்பட்டு, அதில் வேதகிரீஸ்வரர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
மலையடிவாரம் அருகே தாழக்கோலிலில் அருள்மிகு பக்தவசலேஸ்வரரும் மற்றும் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
இக்கோவிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை மாதம் திருகார்த்திகையில் மகாதீபம் மலை கோவிலில் ஏற்றப்படும். அவ்வாறு இன்று திரு கார்த்திகையையொட்டி மலைக்கோவில் வேதகிரிஸ்வரருக்கும் தாழக்கோலில் அருள்மிகு பக்தவசலேஸ்வர் மற்றும் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாளுக்கும் வேதமந்திரங்களுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றன.
பின்னர், மாலை 6.00 மணியளவில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட செப்பு கொப்பறையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
மலைக்கோவிலிலும், மலையடிவாரத்திலும் தீபத் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் தீபம் ஏற்றப்பட்டதும் பக்தி பரவசத்துடன் தீப தரிசனம் செய்து மலைவலம் வந்தனர்.
மலைக்கோவிலை சுற்றி வசிக்கும் பக்தர்கள் மலைக்கோவில் அகண்டத்தில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை தரிசித்து அவரவர் வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வழிப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தாழக்கோவில் சன்னதி தெருவில் சொக்க பானம் கொளுத்தப்பட்டது. முன்னதாக கோவிலில் இருந்து பக்தர்கள் அளிக்கும் நெய் மற்றும் எண்ணெய் பெறுவதற்கு குடங்கள் மேளதாளங்களுடன் 4 மாடவீதிகள் வழியாக சென்றன.
பக்தர்கள் அளித்த நெய் மற்றும் எண்ணெய் கொண்டு மலைக்கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது.