தமிழ்நாடு

2 நாள் பயணமாக சிவகங்கை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-01-20 10:11 IST   |   Update On 2025-01-20 10:11:00 IST
  • முதலமைச்சர் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசின் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்து வருகிறார்.
  • 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேச உள்ளார்.

சென்னை:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசின் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்து வருகிறார். கோவையில் தொடங்கி விருதுநகர், ஈரோடு, வேலூரில் ஆய்வு செய்த அவர் 2 நாள் பயணமாக நாளை சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து நாளை (21-ந்தேதி) காலை விமானத்தில் புறப்படும் அவர் திருச்சி வருகை தந்து, அங்கிருந்து காரில் சாலை வழியாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு வருகிறார்.

அங்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குடும்ப நிதியில் கட்டப்பட்ட வளர் தமிழ் நூலகத்தை திறந்துவைக்கிறார். பின்னர் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நூலகத்திற்கான நோக்க உரையும், கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரையும் ஆற்றுகின்றனர். இதில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மு.பெ.சாமிநாதன், வீ.மெய்யநாதன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ. மாற்றும் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இதையடுத்து மாலை 5 மணிக்கு காரைக்குடி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவில் தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து கட்சி செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக கூட்டத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாநகரின் முக்கிய வீதிகளின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர். இரவு காரைக்குடியில் அவர் தங்குகிறார்.

தொடர்ந்து 22-ந்தேதி காலை காரைக்குடியில் இருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை செல்கிறார். அவருக்கு குன்றக்குடி, திருப்பத்தூர் பைபாஸ் சாலை மற்றும் அரளிக்கோட்டை ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க அந்தந்த பகுதி நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 10 மணியளவில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில், புதிதாக அமைய உள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைத்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேச உள்ளார்.

பின்னர் அங்கிருந்து திருச்சி சென்று பிற்பகலில் விமானத்தில் சென்னை திரும்புகிறார். சிவகங்கை மாவட்டத்திற்கு 21 மற்றும் 22-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் மாவட்டம் முழுவதும் கொடிக்கம்பங்கள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் கட்டப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

Tags:    

Similar News