தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல 20 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு

Published On 2025-01-05 08:45 GMT   |   Update On 2025-01-05 08:45 GMT
  • ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
  • அறிவிப்பு நாளை (6-ந்தேதி) வெளியாக உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. 15-ந்தேதி மாட்டுப் பொங்கல், 16-ந்தேதி காணும் பொங்கல் ஆகும்.

சென்னை மற்றும் பல்வேறு நகரங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜனவரி 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையும், 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,706 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 11,006 பஸ்களும், மற்ற நகரங்களில் இருந்து ஜனவரி 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்களுக்கு 8,478 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 19,484 பஸ்கள் இயக்கப்பட்டன.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,830 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 11,130 பஸ்களும், மற்ற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,459 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 17,589 பஸ்கள் இயக்கப்பட்டன.

சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பஸ்கள் திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம் ஆகிய வழித்தடங்களிலும், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேசுவரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் ஆகிய வழித்தடங்களிலும் இயக்கப்பட்டன.

மேலும் திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் , பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், காட்டுமன்னார்கோவில், விக்கிரவாண்டி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி ஆகிய இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், பெங்களூர் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்கள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம். திருவாரூர், திருத்துறைப்பூண்டி செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன.

சென்னை மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பஸ்கள் மற்றும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

20 ஆயிரம் பஸ்கள்இந்த நிலையில் கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சுமார் 20 ஆயிரம் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பஸ்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும்.

இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி முதல் 19 -ந்தேதி வரை 6 நாட்கள் அரசு சார்பில் விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு ஏராளமான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களின் வசதிக்கு ஏற்ப சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்களை இயக்குவது தொடர்பான அறிவிப்பு நாளை (6-ந்தேதி) வெளியாக உள்ளது.

Tags:    

Similar News