உ.பி.யில் 180 வருட பழமையான மசூதியின் ஒரு பகுதி இடிப்பு: தமிமுன் அன்சாரி கண்டனம்
- நூரி மசூதியின் சுமார் 20 மீட்டர் கட்டடப் பகுதிகள் இடிக்கப்பட்டுள்ளது.
- மசூதியின் சில பகுதிகள் சட்டவிரோதம் என பொதுப்பணித்துறை கூறுகிறது
உத்தர பிரதேச மாநிலத்தில் 180 வருட பழமையான மசூதியின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் இடிக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் ஃபதேபூரில் உள்ள பண்டா-பஹ்ரைச் தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த மசூதி உள்ளது. இந்த மசூதியின் ஒருபகுதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பகுதி இடிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் புல்டோசர் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
லலாவுலி நூரி மசூதி 1839-ம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த பகுதியில் சாலை 1956-ல் போடப்பட்டது. இருப்பினும், மசூதியின் சில பகுதிகள் சட்டவிரோதம் என பொதுப்பணித்துறை கூறுகிறது என மசூதியின் நிர்வாக கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 180 ஆண்டு பழமையான மசூதி இடிக்கப்பட்டதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "உ.பி. மாநிலத்தில் 180 ஆண்டு கால நூரி மசூதியை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் 'அரசியல் புல்டவுசர்' தகர்த்துள்ளது. சாலை விரிவாக்கம் எனில், அது மசூதிகளுக்கு மட்டும்தானா? அவர்களது நோக்கம் என்பது சாலை விரிவாக்கமல்ல. அதன் பெயரால் கலவரம் உருவாக்குவதே நோக்கம்" என்று பதிவிட்டுள்ளார்.