அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு
- கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமினில் வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
- சோதனையில் ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
கரூர்:
கடந்த 2011-16 அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தற்போதைய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.
இவர் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
பின்னர் இதில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்ததாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ந் தேதி கைது செய்தனர்.
மேலும் அப்போது அவரது சகோதரர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமினில் வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் நேற்று (6-ந் தேதி) கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூர் பழனியப்பா தெருவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான அரசு ஒப்பந்ததாரர் எம்சி சங்கர், ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி, ஈரோடு சாலை கோதை நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் ஆகிய மூன்று பேர் வீடுகளில் சோதனை நடந்தது.
காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9:45 மணி அளவில் நிறைவு அடைந்தது.
மேலும் மாயனூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கரின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் சோதனை நடத்த காலை 8 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால் வீடு பூட்டி இருந்ததால் நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னர் பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து அதிகாரிகள் திரும்ப புறப்பட்டு சென்றனர்.
இந்த சோதனையில் கொங்கு மெஸ் சுப்ரமணி, சக்தி மெஸ் கார்த்திக் ஆகியோரது வீடுகளில் இருந்து 2 பைகள் மற்றும் ஒரு பெட்டியில் ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.