தமிழ்நாடு

QR குறியீடு ஒட்டிய பிறகு அதை நீக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்- காவல் ஆணையர்

Published On 2025-03-07 13:31 IST   |   Update On 2025-03-07 13:31:00 IST
  • பாதுகாப்பிற்கு ஆபத்து நேரிட்டால் இந்த க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும்.
  • சென்னையில் இயக்கப்படும் அனைத்து வாடகை வாகனங்களும் இந்த க்யூஆர் குறியீட்டை ஒட்டுவது கட்டாயமாகப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு காவல் உதவி க்யூஆர் குறியீடுகளை வழங்கினார். ஆட்டோ, கார்களில் செல்லும் சமயத்தில் ஆபத்து நேரிட்டால் பொதுமக்கள் காவல்துறையை எளிதாக அணுக இந்த க்யூஆர் குறியீடு உதவி புரியும்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆட்டோ, கார்களில் செல்லும் சமயத்தில் பாதுகாப்பிற்கு ஆபத்து நேரிட்டால் இந்த க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும்.

வாடகை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்கு ஏதாவது அச்சம் ஏற்பட்டால் உடனடியாக வாடகை வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள காவல்துறை க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, காவல்துறை எஸ்ஓஎஸ் செயலியில் தொடர்பு கொண்டால், உடனடியாக அந்த வாகனம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணித்து அருகே உள்ள ரோந்து வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உதவி தேவைப்படுபவருக்கு உடனடியாக உதவி செய்யப்படும்.

வாகனம் சென்று கொண்டிருக்கும் இடம், ஓட்டுநர் உள்ளிட்ட தகவல்களை எளிதில் காவல்துறையினர் அறிய இந்த க்யூஆர் குறியீடு உதவிகரமாக அமையும்.

சென்னையில் இயக்கப்படும் அனைத்து வாடகை வாகனங்களும் இந்த க்யூஆர் குறியீட்டை ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

க்யூஆர் குறியீடு ஒட்டிய பிறகு அதை நீக்கினால் வாகன ரோந்தின்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News