தமிழ்நாடு

சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி- கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

Published On 2025-03-07 13:29 IST   |   Update On 2025-03-07 13:29:00 IST
  • ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களும் கோடை விடுமுறை சீசனையொட்டியும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
  • கோடை வெயிலின் தாக்கத்தினாலும் கன்னியாகுமரிக்கு தற்போது சுற்றுலா பயணி வருகை அடியோடு நின்றுபோய் விட்டது.

கன்னியாகுமரி:

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலை சீசனையொட்டியும் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களும் கோடை விடுமுறை சீசனையொட்டியும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இது தவிர பண்டிகை விடுமுறை காலங்களிலும் வாரத்தின் கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

இந்தநிலையில் பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதாலும், கடுமையான சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தினாலும் கன்னியாகுமரிக்கு தற்போது சுற்றுலா பயணி வருகை அடியோடு நின்றுபோய் விட்டது. குறிப்பாக வட மாநில சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துவிட்டது. இதனால் கன்னியாகுமரியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி மற்றும் கடற்கரை சாலை சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் சுற்றுலா தலங்களும் ஆட்கள் நடமாட்டம் இன்றி களை இழந்து காணப்படுகிறது. விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு 2 படகு மட்டுமே அவ்வப்போதும் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காலை நேரத்திலும் சூரியன் மறையும் மாலை நேரத்திலும் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்த அளவே காணப்படுகிறது.

Tags:    

Similar News