மேட்டுப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
- வீட்டிற்கு ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் ஒரு காரில் வந்தனர்.
- காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனையானது 2½ மணி நேரத்தை தாண்டி நீடித்தது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னாஜிராவ் பகுதியை சேர்ந்தவர் ராஜீக் அகமது. இவர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார்.
இதுதவிர ராஜீக் அகமது அந்த பகுதியில் சொந்தமாக பழைய இரும்பு கடை வைத்து கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை, இவரது வீட்டிற்கு ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் ஒரு காரில் வந்தனர்.
அவர்கள் நேராக வீட்டிற்குள் சென்றதும், வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே நுழையாதபடி மூடினர். பின்னர், வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் இந்த சோதனையானது நடந்தது.
இந்த சோதனையின்போது, வீட்டில் ராஜீக் அகமதுவும் வீட்டில் இருந்தார்.
அவரிடம் அமலாக்கத்துறையினர் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். அவரும் அவர்கள் கேட்டவற்றுக்கு பதில் அளித்தார்.
காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனையானது 2½ மணி நேரத்தை தாண்டி நீடித்தது.
இவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் எதற்காக சோதனை மேற்கொள்கின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. சோதனை முடிவில் தான் எதற்காக இந்த சோதனை நடந்தது. வீட்டில் இருந்து ஏதாவது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பதும் தெரியவரும்.
அமலாக்கத்துறை சோதனையை முன்னிட்டு ராஜீக் அகமதுவின் வீட்டின் முன்பு 18 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இவரது வீட்டில் சோதனை நடப்பது அறிந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சி.ஆர்.பி.எப் வீரர்கள் முற்றுகையிட்டு, எதற்காக சோதனை என கேட்டனர்.
அவர்கள் உரிய பதில் அளிக்காததால் வீட்டின் முன்பு நின்று கண்டன கோஷங்களை கட்சியினர் எழுப்பினர்.
இதேபோல் மேட்டுப்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.