தமிழ்நாடு

கூரைவேயும் நிகழ்ச்சி: கோவில் விழாவில் பாரம்பரிய நடனம் ஆடிய தோடர் பழங்குடியினர்

Published On 2025-03-20 12:18 IST   |   Update On 2025-03-20 12:18:00 IST
  • கூரையை 9 ஆண்டுகளுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நடந்தது.
  • இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், கோத்தர், காட்டு நாயக்கர், இருளர் மற்றும் பணியர் ஆகிய 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.

ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

இதில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என அழைக்கப்படுகிறது. இவர்கள் மாவட்டத்தில் பல பகுதிகளில் 67 மந்துகளில் வசிக்கின்றனர். இவற்றின் தலைமை மந்தாக, தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்து உள்ளது.

இந்தநிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் உள்ள மஞ்சக்கல் மந்து பகுதியில் தோடர் பழங்குடி மக்களின் பழமையான கோவில் உள்ளது. இதன் கூரையை 9 ஆண்டுகளுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நடந்தது.

இந்து கோவில்களில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சி போல் கூரைவேயும் நிகழ்ச்சி இவர்களுக்கு முக்கியமானதாகும்.

இதற்காக கோரக்குந்தா, அப்பர் பவானி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கிடைக்கும் மூங்கில், பிரம்பு மற்றும் அவில் எனப்படும் புல் ஆகியவற்றை கொண்டு வந்தனர். தொடர்ந்து தங்களின் பாரம்பரிய உடை அணிந்து கூரை வேய்ந்தனர். அதன்பின் நேற்று மாலை கோவில் முன்பு அவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் பங்கேற்றனர். இந்த கோவில் பணிகளை ஆண்கள் மட்டுமே மேற்கொள்வார்கள். எனவே ஒருமாதமாக ஆண்கள் விரதம் மேற்கொண்டனர்.

Tags:    

Similar News