ஆசிரியை வீட்டில் 100 பவுன் நகை திருடிய பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கைது
- சேலத்தில் இருந்து பதிவு எண் இல்லாமல் வந்த காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
- திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் ஷேர்லின்பெல்மா (வயது 44). இவர் கோவிலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆசிரியை தனது தாயார் மேரியுடன் வசித்து வருகிறார். கடந்த 8-ந்தேதி ஷேர்லின்பெல்மா வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டார்.
இதனால் மேரி வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சேலத்தில் இருந்து பதிவு எண் இல்லாமல் வந்த காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை நடத்தினர். அதில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.
இதையடுத்து காரில் வந்த 3 பேரையும், போலீசார் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். அவர்கள் 3 பேரும் நெல்லை டவுன் கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ் (34), கார்த்திக் (25), அம்பாசமுத்திரத்தை சேர்ந்த துர்காநம்பி (25) ஆகியோர் என தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆசிரியை ஷேர்லின்பெல்மா வீட்டில் 100 பவுன் நகை, பணத்தை திருடியதும், பிரபல கொள்ளையர்கள் என்பதும், 3 பேர் மீதும் பல்வேறு இடங்களில் திருட்டு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை, கார், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.