தமிழ்நாடு

விமானத்தில் வனத்துறையால் தடை செய்யப்பட்ட ஆமை, பாம்பு, பல்லிகள் கடத்தல்

Published On 2025-03-20 14:17 IST   |   Update On 2025-03-20 14:17:00 IST
  • பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை தனியாக கொண்டு சென்று சோதனையிட்டனர்.
  • கடத்தி வரப்பட்ட அரிய வகை உயரினங்களை கோர்ட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

மதுரை:

தாய்லாந்து தலைநகர் பேங்க்காக்கில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. 100-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்த அந்த விமானத்தில் வழக்கம்போல் சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்கள் கொண்டு வந்த உடமைகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

அப்போது வேலூரை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை தனியாக கொண்டு சென்று சோதனையிட்டனர். இதில் அவர் கொண்டு வந்த ஒரு சூட்கேசில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரியவகை ஆமைகள் 52, பல்லிகள் 4, குட்டி பாம்புகள் 8 என மொத்தம் 64 உயிரினங்கள் கொண்டு வரப்பட்டதை அறிந்த அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து சுங்க அதிகாரிகள் வேலூர் பயணியிடம் விசாரித்த போது, இலங்கையில் இருந்து புறப்படும் சமயத்தில் ஒரு நபர் என்னிடம் வந்து இந்த பெட்டியில் சாக்லேட் இருப்பதாகவும், அதை மதுரை விமான நிலைய வாயிலில் இருக்கும் நபரிடம் கொடுக்குமாறும் கூறியதாக தெரிவித்துள்ளார். யார் அந்த நபர் என்றும், எதற்காக, யாருக்காக இந்த வன உயிரினங்கள் கடத்தி வரப்பட்டன என்றும் அதிகாரிகள் தரப்பில் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து மதுரை விமானநிலைய சுங்க இலாகாவினர் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயரினங்களை கோர்ட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News