டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டணி கட்சிகளும் போராடுவோம்- டி.டி.வி. தினகரன்
- மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசு ஏமாற்றியுள்ளது.
- ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள நடராசன் நினைவிடத்தில் இன்று அவரது நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. இதில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பங்கேற்று நடராசன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவது வித்தியாசம் இல்லை. அனைவரும் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள் தான். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசு ஏமாற்றியுள்ளது. இந்த ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும். இந்தப் பிரச்சனையில் பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டணி கட்சிகளும் கலந்து பேசி போராடவுள்ளோம். இந்த விவகாரத்தில் மாபெரும் ஊழல் வெளிப்பட போகிறது. இதில் ஆட்சியாளர்கள் சிக்கவுள்ளனர்.
தமிழ்நாட்டின் ஜீவாதாரத்தை பாதிக்கும் விதமாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டுவது உறுதியென கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறி வருகிறார். இதனை சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறி மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுப்பதற்கான முயற்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை.
மாறாக அவரது செயலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சென்னையில் நடைபெற உள்ள தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்பட தொண்டர்கள் முன் வர வேண்டும். இதில் யார் தலைவர் என கவுரவம் பார்ப்பது சரியாக இருக்காது. தி.மு.க.வை வீழ்த்த மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்து தொண்டர்களும் தகுதியான நபரை தலைவராகக் கொண்டு ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்