தமிழ்நாடு

படுகொலை செய்யப்பட்ட ஜான்.

ரவுடி வெட்டி படுகொலை: முக்கிய குற்றவாளி இன்று ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார்

Published On 2025-03-20 12:48 IST   |   Update On 2025-03-20 12:48:00 IST
  • சேலத்தில் பிரபல ரவுடியாக செல்லதுரை என்பவர் இருந்துள்ளார்.
  • செல்ல துரையை கொலை செய்ய திட்டமிட்ட ஜான் வெளியூரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லதுரையை‌ கொலை செய்துள்ளார்.

ஈரோடு:

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (வயது 30). இவர் இவரது மனைவி சரண்யாவுடன் திருப்பூரில் வசித்து வந்தார். ஜான் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அண்மையில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஜான், தினமும் காலை சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.

அதேபோல நேற்று தனது மனைவி சரண்யாவுடன் காரில் சேலத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் திருப்பூர் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து 2 கார்களில் 10 பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளது. ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே நெடுஞ்சாலையில் மனைவியுடன் சென்று கொண்டிருந்த ரவுடி ஜான் கார் மீது பின்னால் வந்த கார் மோதியுள்ளது.

அப்போது விபத்து ஏற்படுத்திய காரில் இருந்து வெளியேறிய 4 பேர் கும்பல் ஜானை காரில் வைத்தே சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதனை தடுக்க சென்ற மனைவி சரண்யாவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சித்தோடு போலீசார் அங்கு ரத்த காயத்துடன் ஊர்மக்கள் பிடித்து வைத்திருந்த கார்த்திகேயனை கைது செய்தனர்.

இதையடுத்து கார்த்திகேயன் அளித்த தகவலின் பேரில் காரை பின்தொடர்ந்து சென்றபோது, கொலையாளிகள் சென்ற கார் நின்றது. பின்னர் காரில் இருந்த சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகியோர் காட்டு பகுதியில் தப்பியோடியுள்ளனர். அப்போது சித்தோடு இன்ஸ்பெக்டர் ரவி தனது கைத்துப்பாக்கி மூலம் வாகனத்தில் மூன்று முறை சுட்டு எச்சரித்துள்ளார்.

பின்னர் மூவரும் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் காவலர் யோகராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி தற்காப்பிற்காக மூவரின் காலில் சுட்டு பிடித்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கொலை குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சேலத்தில் பிரபல ரவுடியாக செல்லதுரை என்பவர் இருந்துள்ளார். கொலையான ஜானுவும், செல்ல துரையும் இணைந்து கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்நிலையில் செல்ல துரையை கொலை செய்ய திட்டமிட்ட ஜான் வெளியூரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லதுரையை கொலை செய்துள்ளார்.

இதற்கு பழி தீர்க்க ரவுடி செல்லதுரையின் தம்பி ஜீவகன் முடிவெடுத்துள்ளார். இதற்காக கடந்த 2020ம் ஆண்டு முதல் காத்திருந்த ஜீவகன் நேற்று தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 2 கார்களில் ரவுடி ஜானின் காரை பின்தொடர்ந்து அவரை வெட்டி கொலை செய்துள்ளார்.

இதில் கொலை கும்பலை சேர்ந்த கார்த்திகேயன், சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோரை போலீசார் சுட்டு பிடித்தனர். இந்நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் சேலத்தில் பதுங்கி இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த பார்த்திபன், அழகரசன், பெரியசாமி, சிவகுமார், சேதுவாசன் ஆகிய 5 பேரை பிடித்து சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொலையின் முக்கிய குற்றவாளியான ஜீவகன் இன்று தனது கூட்டாளி சலீம் என்பவருடன் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர். சித்தோடு போலீசார் அவர்களை காவலில் எடுத்த விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News