நெல்லையில் ஓய்வுபெற்ற SI கொலை: இன்ஸ்பெக்டரை தொடர்ந்து உதவி கமிஷனரும் சஸ்பெண்டு
- கிருஷ்ண மூர்த்தியின் மனைவி நூருன்னிஷா தலைமறைவானார்.
- கிருஷ்ண மூர்த்தி மற்றும் ஏட்டு ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை இவர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஜாகீர்உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவ்பிக் என்பவருக்கும் இடையிலான நிலம் தொடர்பான பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொலையில் தச்சநல்லூரை சேர்ந்த கார்த்திக், டவுனை சேர்ந்த அக்பர்ஷா ஆகிய 2 பேர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி காட்டுப்பகுதியில் மறைந்திருந்த கிருஷ்ணமூர்த்தியை சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையிலான தனிப்படையினர் பிடிக்க முயன்றனர்.
அப்போது அவர் காவலர்களை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதில் ஏட்டு ஆனந்துக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்தி அவரை பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து கிருஷ்ண மூர்த்தி மற்றும் ஏட்டு ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று இரவு கிருஷ்ண மூர்த்தியின் காலில் இருந்து குண்டுகள் அகற்றப்பட்டது. இதையறிந்த கிருஷ்ண மூர்த்தியின் மனைவி நூருன்னிஷா தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒரு தனிப்படையினர் அவரை பிடிக்க திருவனந்தபுரம் விரைந்துள்ளனர்.
இந்நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி ஏற்கனவே இடப்பிரச்சனை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போது அது குறித்து போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், முறையாக விசாரணை நடத்தி இருந்தால் கொலையை தடுத்து இருக்கலாம். எனவே முறையாக விசாரணை நடத்தாத டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், அப்போதைய உதவி கமிஷனராக இருந்த செந்தில்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து நேற்று இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் உதவி கமிஷனர் செந்தில்குமாரை சஸ்பெண்டு செய்து டி.ஜி.பி. இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.