தமிழ்நாடு

தொடர் கொலை சம்பவங்கள் எதிரொலி: தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார்- குற்றவாளிகளை சுட்டு பிடிக்க உத்தரவு

Published On 2025-03-20 12:35 IST   |   Update On 2025-03-20 12:35:00 IST
  • சென்னையிலும் ரவுடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
  • தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் தொடர்ச்சியாக கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது.

இது தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறு செய்யும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

நெல்லை சம்பவத்தை தொடர்ந்து சென்னை அயனாவரத்தை சேர்ந்த தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியும் முன்னாள் எம்.பி. குப்புசாமியின் உதவியாளருமான குமார் என்பவரும் நில பிரச்சனை தொடர்பாக கடத்தி கொலை செய்யப்பட்டார். சேலத்தில் ஈரோட்டை சேர்ந்த ரவுடி நடுரோட்டில் பட்டப்பகலில் காரில் வைத்தே மனைவி கண் எதிரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னையிலும் ரவுடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களது பகுதிகளில் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிலப்பிரச்சனை உள்ளிட்டவற்றுக்காக போலீஸ் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர்களிடம் வலியுறுத்தி கூறப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் தலைமறைவாக உள்ள ரவுடிகள் யார்-யார்? என்பதை பட்டியல் எடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று குற்றப் பின்னணியில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் மீதும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழிக்குப்பழி வாங்கும் வகையில் நடைபெறும் கொலை சம்பவங்களை தடுப்பதற்காக கொலை சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் சிறையில் இருந்து வெளிவர முடியாத அளவுக்கு குண்டர் சட்டம் போன்றவற்றையும் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் உயர் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

ரவுடிகள் இடையேயான மோதலில் நடக்கும் கொலை சம்பவங்கள் பற்றி விரிவாக விசாரணை நடத்தி அதன் முழு பின்னணியையும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதுடன், சிறையில் இருந்து அவர்கள் விடுதலையான பின்னர் முழுமையாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து கணக்கெடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டு கொலை சம்பவங்கள் குறைவாகவே நடந்து உள்ளன. 2024-ல் 1,540 பேர் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னர் கொலை சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன.

குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் வேகத்தோடு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News