ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்கு
- பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் மட்டும் அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- கடந்த 2013-ம் ஆண்டு சென்னை தி.நகரில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஞானசேகரன் ஈடுபட்டுள்ளார்.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் ஞானசேகரனிடம் விசாரணை நடத்திய போது அவர் திருட்டு உள்பட மேலும் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஞானசேகரன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் மட்டும் அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாம்பலம் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு சென்னை தி.நகரில் நடந்த திருட்டு சம்பவத்தில் ஞானசேகரன் ஈடுபட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக போலீசார் இன்று ஞானசேகரனை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.