தமிழகம் முழுவதும் நாளை அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
- நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 27.12.2024 வெள்ளிக் கிழமை காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும்; மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும், நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.
திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.