மக்கள் போராட்டங்களைக் கண்டு நடுங்காதீர்? - எடப்பாடி பழனிசாமி
- போராட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை;
- திமுக நேற்று அறிவித்து இன்று நடத்தும் ஒரு நாடகப் போராட்டத்திற்கு அனுமதியை வழங்கியிருப்பது எப்படி?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சார்பில் நடைபெறும் நடைபயணப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியை மறுத்துள்ள ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
போராட்டம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை; ஆனால் இங்கு நடக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் பாசிச ஆட்சியோ, ஜனநாயகத்தின் உரிமைகளை ஒட்டுமொத்தமாக விழுங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என யாரும் எதற்கும் போராடக் கூடாது என்றும், அதையும் மீறி மக்கள் உணர்வுப்பூர்வமாகப் போராடினால், காவல்துறை கொண்டு அடக்குமுறையைக் கையாள்வது என்றும் அவசர நிலை ஆட்சியையே நடத்திவருகிறது.
முறையாக அனுமதி கோரப்பட்டு, மிகவும் அமைதியாக அறவழியில் பொதுமக்கள் நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் ஸ்டாலின் மாடல் அரசு, யாரையோ காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில், அண்ணா பல்கலை. வளாக பாலியல் வன்கொடுமை வழக்கை திசைதிருப்பும் வகையில் திமுக நேற்று அறிவித்து இன்று நடத்தும் ஒரு நாடகப் போராட்டத்திற்கு அனுமதியை வழங்கியிருப்பது எப்படி?
டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்ப்பதாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் மாடல் அரசு நடத்திய தீர்மான நாடகமே அம்பலமாகிவிட்ட நிலையில், தற்போது இந்த போராட்டத் தடை மூலம் திமுக அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைய ஆதரவாகவே இருக்கின்றது என்ற உண்மை மக்களிடையே உறுதியாகிவிட்டது.
மக்கள் போராட்டங்களைக் கண்டு நடுங்காமல், அவற்றிற்கான உரிய அனுமதிகளை வழங்குமாறு ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.