தமிழ்நாடு

தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்து வருகிறது: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

Published On 2024-12-24 11:16 GMT   |   Update On 2024-12-24 12:03 GMT
  • பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரத்தை ஆராய்ந்து பார்த்தால் நமது மாநிலம் மிகவும் கீழே செல்கிறது.
  • தென்னிந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளது.

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு வரையிலான கட்டாய பாஸ் என்ற நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்தது. என்றாலும், தமிழகத்தில் அந்த நடைமுறை தொடரும் என அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.

இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

கல்வியின் தரத்தை உயர்த்தவே 5 முதல் 8-ம் வகுப்பு கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பயிற்சியளித்து மறுத்தேர்வு வைக்கப்படும்.

பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரத்தை ஆராய்ந்து பார்த்தால் நமது மாநிலம் மிகவும் கீழே செல்கிறது. தென்னிந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளது.

வடமாநிலத்துடன் தமிழகத்தை ஒப்பிடக் கூடாது. தமிழகத்தின் கல்வித்தரம் குறைந்து வருகிறது. மாணவர்கள் எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்றுதான் கணக்கெடுக்கிறோம். படிக்காமலேயே மாணவனை சும்மா உட்கார வைத்தால் கல்வித்தரத்தில் கீழே உள்ள மாணவனை எப்படி உயர் கொண்டு வருவீர்கள்?.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தமிழகம் வர வாய்ப்புள்ளது. 4 மாவட்டத்தில் கட்டப்பட்ட பா.ஜ.க. அலுவலக கட்டடத்தை திறக்க அழைப்பு விடுத்துள்ளோம். வருகை குறித்த தேதி முடிவு செய்தபின் அறிவிப்போம்.

கேப்டனின் குருபூஜையில் பா.ஜ.க.வினர் கலந்து கொள்வோம்.

Tags:    

Similar News