எம்ஜிஆருக்கு விஜய் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை? - தமிழிசை கேள்வி
- த.வெ.க. தலைவர் விஜய் தந்தை பெரியார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்
தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் இன்று காலை முதலே தந்தை பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், த.வெ.க. தலைவர் விஜய் தந்தை பெரியார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்."
"அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய தவெக தலைவர் விஜய், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினமான இன்று ஏன் அஞ்சலி செலுத்தவில்லை" என்று மூத்த பாஜக தலைவர் தமிழிசை தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......??? பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய தவெக தலைவர் சகோதரர் விஜய் அவர்கள் மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினமான இன்று ஏன் அஞ்சலி செலுத்தவில்லை...?
டெல்லியில்... பிரதமர் அவர்கள் எந்தக் கட்சி சார்ந்தவராக இருந்தாலும் முன்னாள் பிரதமர்களின் நினைவு தினங்களில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.... அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-ஆண்டு கால அரசியலிலும் முக்கிய பங்காற்றிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள் அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டுமில்லையா ? இது ஒரு சாமானியனின் கேள்வி?" என்று பதிவிட்டுள்ளார்.