இயேசு கிறிஸ்துவின் அன்பு, அமைதி வழிதான் தற்போதைக்கு தேவையானதாக இருக்கிறது- மு.க.ஸ்டாலின் வாழ்த்து
- இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் அன்பையும் விதைத்தவர் இயேசு பெருமான்.
- சிறுபான்மையின மக்களின் நலனுக்காக தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருக்கும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.
சென்னை:
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற வன்முறையை தவிர்த்து, 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள்' என்று பொறுமையையும், 'ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால் அவனுக்கு அதை கொடுத்து விடுங்கள்' என ஈகையையும், 'பகைவர்களையும் நேசியுங்கள்' எனக்கூறி இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் அன்பையும் விதைத்தவர் இயேசு பெருமான்.
போர்களினாலும், வெறுப்புணர்வினாலும் உலகம் அல்லலுறும் இவ்வேளையில் அவர் காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது.
அத்தகைய அன்பின் பாதையை நெறிதவறாமல் பின்பற்றும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்களின் நலனுக்காக தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருக்கும்போதெல்லாம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது.
அந்த வகையில் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியிலும் ஜெருசலேம் செல்வதற்கான நிதி உதவி ரூ.60 ஆயிரமாக உயர்வு, 8 தொன்மை வாய்ந்த தேவாலயங்களை மறுசீரமைக்க நிதியுதவி, தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 345 மகளிருக்கு 4.32 கோடி ரூபாய் நிதியுதவி, ஏராளமான கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்குச் சிறுபான்மை அந்தஸ்து,
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் என பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
அனைத்து மதத்தவரும், அனைத்து மொழி பேசுவோரும் நல்லிணக்கத்தோடும் - சம உரிமையோடும் - சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபடும் என கிறிஸ்துமஸ் நன்னாளில் உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.