காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர்
- நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்.
- ஒருவரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருவதாக கமிஷனர் அலுவலகம் தகவல்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் புகார் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க நான்கு சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். மாணவியின் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிவாளர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
புகழ்வாய்ந்த அண்ணா பல்கலைக்கழத்தின் வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புவதாக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.