காவிரி ஆற்றில் மாயமான பள்ளி மாணவர்களை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்- ஒருவர் உடல் மீட்பு
- படித்துறையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினால் நீச்சல் அடிக்கும் ஆசையில் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றனர்.
- முதலைகள் நடமாட்டம் மற்றும் இரவு வெகு நேரம் ஆனதால் தேடும் பணி நேற்று இரவு நிறுத்தப்பட்டது.
திருச்சி:
திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மாணவர்கள் 10 பேர் நேற்று அரையாண்டு இறுதித் தேர்வு முடிந்ததையடுத்து மதியம் ஒரு மணி அளவில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். பின்னர் குடமுருட்டி பகுதியில் காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறையில் இறங்கி குளித்தனர்.
படித்துறையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினால் நீச்சல் அடிக்கும் ஆசையில் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றனர்.
ஆனால் ஆற்றின் மையப் பகுதியில் நீரோட்டம் அதிகமாக இருந்தது. இதனால் எதிர்நீச்சல் போட முடியாமல் தவித்தனர். பின்னர் நீச்சல் தெரிந்த 7 மாணவர்கள் தத்தளித்து நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர்.
ஆனால் பாலக்கரை பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் (வயது 15), விக்னேஷ் (16), சிம்பு (16) ஆகிய 3 மாணவர்களை வெள்ளம் இழுத்து சென்று விட்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அந்த மாணவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் அய்யாளம்மன் படித்துறையில் திரண்டனர்.
பின்னர் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்பதற்காக ரப்பர் டியூப் உதவியுடன் காவிரியின் மையப்பகுதிக்கு சென்று தேடிப் பார்த்தனர்.
சம்பவ இடத்தில் திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் விவேகானந்த சுக்லா, உதவி ஆணையர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டனர்.
இதற்கிடையே நீரில் மூழ்கிய மாணவர்களை தேடும்பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டபோது, ஒரு பெரிய முதலை ஆற்றில் சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அந்த முதலை புதருக்குள் சென்ற பின்னர் தேடும் பணியில் ஈடுபட்டனர். முதலைகள் நடமாட்டம் மற்றும் இரவு வெகு நேரம் ஆனதால் தேடும் பணி நேற்று இரவு நிறுத்தப்பட்டது.
இன்று முக்கொம்பு மேலணையில் காவிரி ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டு தேடும் பணி தொடங்கப்பட்டது.
இதில் கண்டோன்மெண்ட், ஸ்ரீரங்கம் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் 50 பேர் ஈடுபட்டனர். அவர்கள் ரப்பர் படகு, பரிசல், ஸ்கூபா ஆகிய உபகரணங்களுடன் இறங்கி தேடினர்.
பின்னர் நீரில் அடித்து செல்லப்பட்ட ஜாகிர் உசேன் உடலை பிணமாக மீட்டனர்.
மற்ற 2 மாணவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நீரில் மூழ்கிய 3 மாணவர்களில் ஒரு மாணவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.