ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
- 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
- ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்தல் விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தினரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 636 வாக்காளர்கள் உள்ளனர். 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும். மேலும், சி-விஜில் செயலி மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். 1950 என்ற இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல் நடத்தை விதிமுறை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற தொகுதிகளில் விதிமுறைகள் அமலுக்கு வராது. தேர்தலில் விதிமீறல் ஏற்படுவதை தடுக்க 3 தேர்தல் பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வையாளர் குழு, ஒரு தணிக்கை குழு என மொத்தம் 5 வகையான குழுக்கள் செயல்படுகின்றன.
இதில் நிலை கண்காணிப்பு குழு மட்டும் 10-ந் தேதி முதல் செயல்படும். மற்ற குழுக்கள் தற்போது இருந்தே செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.
தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை கொண்டு செல்லக்கூடாது. அப்படி ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்.
கடந்த முறை மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகள் கொண்டு வந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான பிரச்சனை ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்குட்பட்டு வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.