கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு
- 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி தடப்பள்ளி, அரக்கன் கோட்டை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
- இன்று திறக்கப்பட்ட தண்ணீர் தொடர்ந்து 120 நாட்களுக்கு 8.5 டி.எம்.சி. அளவிற்கு வழங்கப்படும்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து ஆண்டு தோறும் தடப்பள்ளி, அரக்க ன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு இரண்டு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி தடப்பள்ளி, அரக்கன் கோட்டை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அரசு அதை ஏற்று தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி. அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அதை பொதுப்பணித்துறை அதிகாரிகள், கொடிவேரி அணை பாசனதாரர் சங்க நிர்வாகிகள் மற்றும் கலந்து கொண்டு மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டனர். இதில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா, உதவி பொறியாளர்கள் குமார், ரத்தினகிரி உள்பட பலர் கலந்து கொண்டர். தண்ணீரானது சீறிப்பாய்ந்து வாய்க்காலில் சென்றது. கொடிவேரி அணை மூலம் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் தொடர்ந்து 120 நாட்களுக்கு 8.5 டி.எம்.சி. அளவிற்கு வழங்கப்படும்.
உரிய காலத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பாசன சங்க நிர்வாகிகள் கூறும்போது, தமிழக அரசு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.