தமிழ்நாடு
குன்னூர் மார்க்கெட்டில் தீ விபத்து- 15-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்

குன்னூர் மார்க்கெட்டில் தீ விபத்து- 15-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்

Published On 2025-03-27 09:56 IST   |   Update On 2025-03-27 09:56:00 IST
  • மார்க்கெட்டில் இருந்த துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
  • கடைகளில் இருந்தவர்கள் வெளியில் வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமாக மவுண்ட்ரோடு பகுதியில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

காய்கறி கடை, துணிக்கடை, எலெக்ட்ரிக் பொருட்கள் கடை, பெயிண்ட் என என பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. குன்னூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் இங்கு கடை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவு 10 மணியளவில், வழக்கம் போல வியாபாரிகள் கடையில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடைகளை அடைத்து கொண்டிருந்தனர்.

அப்போது மார்க்கெட்டில் இருந்த துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடை முழுவதும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் துணிக்கடையில் பற்றிய தீ அருகே உள்ள மற்ற கடைகளுக்கும் மளமளவென பரவியது. அந்த கடைகளிலும் தீ பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

தீ விபத்து ஏற்பட்டதை பார்த்ததும், அங்கு இருந்த வியாபாரிகளும், பொதுமக்களும், அந்த இடத்தை விட்டு நகர்ந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். கடைகளில் இருந்தவர்கள் வெளியில் வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அவர்கள் தண்ணீரை எடுத்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென மார்க்கெட்டில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவியதால் கட்டுப்படுத்த முடியவில்லை.

உடனடியாக குன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் வாகனங்களில் வேகமாக வந்து, மார்க்கெட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து ஊட்டி, கோத்தகிரி மற்றும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்களும், வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது. ஓரளவு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தபோது, அங்குள்ள பெயிண்ட் கடையில் உள்ள பொருட்களில் தீ பற்றி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா, குன்னூர் சப்-கலெக்டர் சங்கீதா, நகராட்சி ஆணையர் இளம் பருதி, குன்னூர் டி.எஸ்.பி. ரவி, நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவை தாண்டி மார்க்கெட்டில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில், மார்க்கெட்டில் உள்ள துணி, பெயிண்ட், மளிகை கடை என 15-க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் பல கோடி மதிப்பிலான பொருட்களும் எரிந்து தீக்கிரையானது.

இன்று காலையும் அதிகளவு புகை மூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் தீயணைப்பு துறையினர் அங்கேயே முகாமிட்டு அதனை கண்காணித்து வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர் மார்க்கெட் பகுதி முற்றிலும் சீல் வைக்கப்பட்டு, அங்கு யாரும் செல்லாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மார்க்கெட் பூட்டப்பட்டுள்ளதால் மார்க்கெட்டிற்கு வந்த சரக்கு லாரிகள் சாலைகளில் அணிவகுத்து நின்றது.

இந்த தீ விபத்து தொடர்பாக குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் தான் தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News