கட்டாய திருமணத்தால் சிறுமி தற்கொலை- தாய், புதுமாப்பிள்ளை போக்சோவில் கைது
- சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தேக்லான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் தாமோதரன் (வயது 29). இவருக்கும், பென்னாகரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 10-ந்தேதி பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படடது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கட்டாய திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயார் மற்றும் புதுமாப்பிள்ளை தாமோதரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.