20 ஆண்டுகளாக பாம்பு பிடித்து வந்தவர் பாம்பு கடித்து உயிரிழப்பு
- கடந்த 17-ந் தேதி தொண்டாமுத்தூர் நால்ரோடு குடியிருப்பு பகுதிக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.
- பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடிக்க முயன்றார்.
கோவை:
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 40). இவர் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடும் பணியை 20 ஆண்டுகளாக செய்து வந்தார். கடந்த 17-ந் தேதி தொண்டாமுத்தூர் நால்ரோடு குடியிருப்பு பகுதிக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த தகவலின் பேரில் சந்தோஷ் அங்கு சென்றார். அவர், அங்கு பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று அந்த நாகப்பாம்பு அவரை கடித்தது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாம்பு கடித்து, பாம்பு பிடி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தோசுக்கு திருமணம் ஆகி மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.