நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை நீடிப்பு
- அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
- தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. சில இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்தது. நள்ளிரவில் சில இடங்களில் பயங்கர இடி-மின்னலுடன் மழை பெய்தது.
அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆய்குடியில் 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது . மழை காரணமாக குற்றாலத்தில் மிதமான அளவில் அனைத்து அருவியிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.
தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு 2 மணி அளவில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக குண்டாறு அணையில் 26.20 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும் மழை பெய்தது. ராமநதி மற்றும் கடனாநதி அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தலா 8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. நெல்லை மாநகரப பகுதியிலும் இரவில் மழை பெய்த நிலையில் இன்றும் அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.
மாநகரில் பாளையங்கோட்டையில் 7.20 மில்லி மீட்டரும், நெல்லையில் 6.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் அம்பை, கண்ணடியன் கால்வாய் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் சேர்வலாறு அணை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணையின் நீர்வரத்து 214 கன அடியாக இருந்து வருகிறது. அணை நீர்மட்டம் உயர்வில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்தது.