நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்- அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
- நந்தன் கால்வாயினால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட 36 ஏரிகளும், 6654.38 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.
- நீர்வளத்துறை பட்டியலில் இல்லாத 100-க்கும் மேற்பட்ட ஏரிகளும், 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தென்பெண்னை பாலாறு செய்யாறு வழியே இணைக்கும் திட்டத்தினாலும், சாத்தனூர் அணையிலிருந்து நந்தன் கால்வாயில் இணைக்கும் திட்டத்தினாலும் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் பயன் பெறுவார்கள். இத்திட்டத்தினால் சாத்தனூர் அணையிலிருந்து இதுவரையில் பயன் பெறாத திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் 22 ஏரிகளும், 6,800 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.
நந்தன் கால்வாயினால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட 36 ஏரிகளும், 6654.38 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். மேலும் நீர்வளத்துறை பட்டியலில் இல்லாத 100-க்கும் மேற்பட்ட ஏரிகளும், 10,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். இப்படி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் கிடைக்கும், விவசாய பெருமக்களின் விளைநிலங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும்.
எனவே தமிழக அரசானது நீர்வளத்துறையால் அறிவித்தபடி இத்திட்டத்தினை துவக்கி நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் விடுத்துள்ள கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.