தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2025-01-05 09:31 GMT   |   Update On 2025-01-05 09:31 GMT
  • தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருக்க காரணம் ஒருபுறம் டாஸ்மாக், மறுபுறம் போதை பொருட்கள் நடமாட்டம்.
  • சட்டம் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் ஒன்று தான்.

ஈரோடு:

ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், புதிய கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் ஜி.கே.வாசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பெற்றோர்கள், மாணவிகள் அச்சத்தில் இருப்பது தான் உண்மை நிலை.

குற்றவாளிக்கு யார் பின்பலமாக உள்ளார்கள். அரசியல் பின்புலம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் யார் அந்த சார் என்பதை தெளிவுப்படுத்தினால் தான் மக்கள் அரசை நம்புவார்கள். குற்றவாளியை விரைவில் விசாரித்து தண்டனையை விரைந்து வழங்க வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தான். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருக்க காரணம் ஒருபுறம் டாஸ்மாக், மறுபுறம் போதை பொருட்கள் நடமாட்டம். இதனை கட்டுப்படுத்த, நிறுத்த முடியமால், முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் தமிழக அரசு செயல்படுவது தமிழக மக்களுக்கு தலைக்குனிவு.

பாலியல் வழக்குகளில் உண்மையான குற்றவாளி என கண்டறியப்பட்டால் தூக்கு தண்டனை வழங்குவதில் தவறில்லை. விசாரணை நம்பிக்கைக்குரிய விசாரணையாக நடைபெற வேண்டும் என்றால் கடந்த மாதம் 23-ம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக திகில் சினிமா போல ஊடகங்களில் செய்தி வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து முதலமைச்சர் நேரடியாக பதில் கூறாதது உண்மையில் மகளிருக்கு போதுமான மரியாதை கொடுக்கவில்லை என்பது தான் அர்த்தம். தி.மு.க .கூட்டணியில் உள்ள தோழமை கட்சி கூட நேரடியாக சம்பவத்தை விமர்சனம் செய்து போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்து எமர்ஜென்சி போல நிலை ஏற்படுகிறது என்று தோழமை கட்சி கூறுவது அரசு நிர்வாக சீர்கேடுக்கு எடுத்துக்காட்டு.

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. பெற்றோர், மாணவிக்கு எதிர்கட்சிகள் துணை நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பாடுகள் உள்ளது. அதே நேரத்தில் நீதிமன்றம் ஆணையை ஏற்கிறோம். அமைச்சர் துரைமுருகன் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை சட்டத்தின் படி தான் நடக்கின்றது.

சட்டம் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் ஒன்று தான். அமலாக்கத்துறை சோதனை குறித்து தி.மு.க செய்தி தொடர்பாளர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். மாணவி விவகாரத்தில் நாள்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வருகிறது. அதனால் பெற்றோர், மாணவிகளுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்றால் சி.பி.ஐ விசாரணைக்கு போகவேண்டும்.

இந்த விவாகரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்க நினைப்பதாக மக்கள் நினைக்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி சார்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும். தேர்தலுக்கு 6 மாதம் முன்பு தான் அனைத்து கட்சிகளும் தங்களை பலப்படுத்தி கொள்ள நினைக்கும்.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கட்சி பணிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, உறுப்பினர்கள் அதிகரிப்பு பணிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றுடன் ஊராட்சி பகுதிகளை இணைக்கும் சட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் கேன்சர் நோயாளிகள் அதிகமாக இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பொது சுத்தகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

கோவை இருகூர் முதல் முத்தூர் வரை கேஸ் பைப்லைன் விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படும் குழாய்களை சாலையோரமாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலைகள் வெடி விபத்து நிகழ்ந்து வருகிறது. இதற்கு அரசு சரியான நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இடைத்தேர்தலில் ஆளும் கட்சி ரூ.2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுக்க நினைக்கும் நிலையில் பேரிடர் மற்றும் பொங்கல் தொகுப்பு என்றால் நிவாரண தொகை வழங்குவதில்லை. அதனால் பொங்கல் சிறப்பு தொகுப்பில் பணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News