தமிழ்நாடு

பணி நியமன ஆணை வழங்காததால் பட்டதாரி ஆசிரியர் தற்கொலை: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Published On 2025-02-23 11:02 IST   |   Update On 2025-02-23 11:02:00 IST
  • பணி நியமன ஆணைகளை வழங்க காலதாமதப்படுத்தும் தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த வேல்முருகன் இடம் பெற்றிருந்தார்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு எட்டு மாதங்கள் கடந்த நிலையிலும் பணி நியமன ஆணை வழங்கப்படாததன் காரணமாக மன உளைச்சலில் இருந்த வேல்முருகன் நேற்று முன்தினம் உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணி நியமன ஆணைகளை வழங்க காலதாமதப்படுத்தும் தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உயிரிழப்புக்கு அரசு பொறுப்பேற்று அவரின் மனைவிக்கு அவரது தகுதிக்கு ஏற்ப உடனடியாக அரசு வேலை வழங்கவும்; இனியாவது, தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News