ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1200 கன அடியாக சரிவு
- சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், மீன் கடை, பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 300 கன அடியாக நீர்வரத்து சரிந்தது. அதனை தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆறு முழுவதும் தண்ணீர் இல்லாமல் பாறைகளாக காட்சியளித்தது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1500 கன அடியாக திடீரென அதிகரித்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததாலும், கர்நாடகா அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைந்ததாலும், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 8மணி நிலவரப்படி சற்று சரிந்து வினாடிக்கு 1200 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து சற்று குறைந்த போதிலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டியது.
இந்த நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அவர்கள் சினிபால்ஸ், மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிகளில் எண்ணெய் மசாஜ் செய்து குளித்து மகிழ்ந்தனர். இதேபோன்று சுற்றுலா பயணிகள் படகு சவாரி நிலையத்தில் இருந்து படகில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், மீன் கடை, பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திடீரென்று மழை பெய்வதாலும், மழை அளவு குறைவதாலும், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. எனவே, தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.