செங்கோட்டையனுக்கு அ.தி.மு.க.வில் எதிர்ப்பு- 'பொது வெளியில் பேசுவது அநாகரீகம்' என குற்றச்சாட்டு
- அ.தி.மு.க. நிர்வாகிகள் செங்கோட்டையனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
- செங்கோட்டையனின் செயல்பாடுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள பொதுச்செயலாளர் இது தனிப்பட்ட விஷயம் என்று தெரிவித்து விட்டார்.
சென்னை:
அ.தி.முக.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்ட பிறகு கட்சியின் தலைமை பதவியை கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 28-ந்தேதி பொறுப்பேற்ற இவர் தொடர்ந்து கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருவதுடன் மாவட்ட செயலாளர்கள் முதல் பல்வேறு அணிகளிலும் நிர்வாகிகளை நியமித்துள்ளார். அ.தி.மு.க.வை வலுப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை மாவட்டந்தோறும் அனுப்பி வைத்து கள ஆய்வையும் மேற்கொள்ள வைத்தார்.
இப்படி முன்னணி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வந்தபோதிலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கட்சியில் ஓரம் கட்டப்பட்டு வந்தார்.
மாவட்டம் வாரியாக கள ஆய்வு பணிக்காக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலிலும் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறவில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறாததாலேயே நான் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தேன் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார்.
இருப்பினும் எடப்பாடி பழனிசாமியுடனான கருத்து மோதல் காரணமாகவே செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று பரபரப்பான தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை மறுத்த செங்கோட்டையன் எப்போதும் போல கட்சி பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டையன் தலைமையில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் ஒரு பிரிவினர் அவருக்கு எதிராக செயல்பட்டு மோதலில் ஈடுபட்டனர்.
கட்சியில் இருந்து ஏற்கனவே ஓரம் கட்டப்பட்டிருந்த செங்கோட்டையன் இந்த மோதல் சம்பவத்தால் கட்சி தலைமை மீது மேலும் அதிருப்தியில் இருந்தார். இதுதான் கடந்த 2 நாட்களாக எதிரொலித்துக் கொண்டு உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இதில் பங்கேற்க வந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேராக சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்தார். சட்டசபையில் பட்ஜெட் தாக்கலானபோது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து கோஷமிட்டனர். ஆனால் செங்கோட்டையன் அமர்ந்தபடியே இருந்தார். அதே நேரத்தில் சபாநாயகர் அப்பாவுவை அவர் தனியாக சந்தித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் ஆவேசத்துடன் பதில் அளித்தார்.
"செங்ட்டைகோட்டையன் நடந்து கொள்வது பற்றி அவரிடமே கேளுங்கள்" என்னிடம் இதுபற்றியெல் லாம் கேட்க வேண்டாம் என்று காட்டமாக கூறினார்.
இந்த நிலையில் செங்கோட்டையனுக்கு அ.தி.மு.க.வில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக செங்கோட்டையன் விவகாரம் அ.தி.மு.க.வில் புகைச்சலை ஏற்படுத்தி இருந்த நிலையில் முதல் முறையாக அ.தி.மு.க. நிர்வாகிகள் செங்கோட்டையனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான வைகைச் செல்வன் காஞ்சிபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
செங்கோட்டையனின் செயல்பாடுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள பொதுச்செயலாளர் இது தனிப்பட்ட விஷயம் என்று தெரிவித்து விட்டார். சட்டமன்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக நடத்தப்பட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அவருக்கு என்ன பிரச்சனை என்று அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
அ.தி.மு.க. தொண்டர்களால் இயக்கப்படுகிற இயக்கம் ஆகும். தொண்டர் தொடங்கிய இயக்கத்தில் தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இணைத்துக் கொண்டதுதான் வரலாறு. அப்படி தோன்றிய இயக்கத்தை 50 ஆண்டுகள் அழைத்துச் சென்றவர் புரட்சி தலைவி.
எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள், 3 மாதம் ஆட்சி பீடத்தில் இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவராக இருந்து கட்சியை வழி நடத்திக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஒன்றிரண்டு பூசல்கள் இருக்கும். கசப்புகள் இருக்கும். கருத்து வேறுபாடுகள் இருக்கும். இந்த வேறுபாடுகள் மற்றும் மன வருத்தத்தால் கட்சியில் இருந்து போனவர்கள் காணாமலேயே போய்விட்டார்கள்.
சொந்த அண்ணன்-தம்பிக்குள் பிரச்சனை என்றால் பேசி தீர்க்க வேண்டும். செங்கோட்டையனுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் பொதுச்செயலாளரைத் தான் சந்தித்து பேசி இருக்க வேண்டும்
அதை விட்டு விட்டு பொது வெளியில் அவர் இப்படி நடந்து கொள்வது அநாகரீகமான செயலாகும்.
இவ்வாறு வைகை செல்வன் கூறினார்.
செங்கோட்டையன் விவகாரத்தில் அ.தி.மு.க.வில் மீண்டும் மோதல் வெடித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.