ஆதவ் அர்ஜுனா மூலமாக திருமாவளவனை கூட்டணிக்கு இழுக்க விஜய் திட்டமா? பரபரப்பு தகவல்கள்
- ஆதவ் அர்ஜுனா மூலமாக மற்ற கட்சிகளும் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்காக முயற்சிக்கும்.
- அடுத்தடுத்த நகர்வுகள் வரும் காலங்களில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியை அமைப்பதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.
இதற்கிடையே தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கட்சி தொடங்கிய பிறகு நடைபெற்ற முதல் மாநாட்டில் பேசிய விஜய் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும், அது போன்று கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இவரது கருத்தையொட்டியே திருமாவளவனும் சில நாட்களுக்கு முன்பு கருத்துக்களை கூறி இருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அப்போது இருந்த ஆதவ் அர்ஜுனா ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கோஷத்தை வலுவாகவே எழுப்பினார். இது தி.மு.க.-விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே விரிசலை ஏற்படுத்துவது போன்ற சூழலையும் உருவாக்கியது.
இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் என்கிற புதிய பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் தனது பழைய தலைவரான திருமாவளவனை அவர் சந்தித்து பேசினார். இது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆதவ் அர்ஜுனா மூலமாக தமிழக அரசியலில் விஜய் கூட்டணி கணக்கை தொடங்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் அரசியல் ஆர்வலர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஆதவ் அர்ஜுனா மூலமாக மற்ற கட்சிகளும் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்காக முயற்சிக்கும். அடுத்தடுத்த நகர்வுகள் வரும் காலங்களில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக அ.தி.மு.க.-தமிழக வெற்றி கழகம் இடையே எதிர்காலத்தில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா சேர்ந்திருப்பது கூட்டணி ஆட்சி கோஷத்துக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகவும் உள்ளது.
ஆனால் ஆதவ் அர்ஜுனா என்னை சந்தித்து பேசியதன் பின்னணியில் எந்த அரசியல் கணக்கும் இல்லை என்று திருமாவளவன் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறி இன்னொரு கட்சியில் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் எனது வாழ்த்தும் தேவை என்கிற எண்ணத்தில் அவர் தேடி வந்திருக்கும் இந்த அணுகுமுறையை தமிழக அரசியலில் கற்றுக் கொள்ள வேண்டும்.
கருத்தியல் ரீதியாக களத்தில் எதிர் எதிர் துருவங்களாக செயல்படக் கூடிய நிலை இருந்த போதும் இது போன்ற நட்புறவை பேணுவது நாகரீகமான அணுகு முறையாகும். ஆதவ் அர்ஜுனா என்னை சந்தித்ததில் எந்த அரசியல் கணக்கும் இல்லை. இதற்கு எந்தவித முடிச்சும் போட்டு பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.