தமிழ்நாடு

தமிழகத்திற்குள் இயங்கும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2025-02-01 10:11 IST   |   Update On 2025-02-01 10:11:00 IST
  • இன்று மத்தியதர வகுப்பினா் அவசரத் தேவைகளுக்கு விமானத்தில் பயணிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் ஒட்டுமொத்தமாக 18,43,337 பேர் சென்னை விமான நிலையம் வந்து சென்றுள்ளனர்.

திருச்சி:

ஒரு காலத்தில் விமானப் பயணம் என்பது பெரும் பணக்காரா்களுக்கே சாத்தியமானதாக இருந்தது. ஆனால், இன்று மத்தியதர வகுப்பினா் அவசரத் தேவைகளுக்கு விமானத்தில் பயணிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.

தொலைவில் உள்ள இடத்திற்கு குறைந்த நேரத்தில் அடைந்துவிட முடியும் என்பதாலும், ரெயில் பயணம், பஸ் பயணம் போன்றவை ஏற்படுத்தும் அலுப்பும் களைப்பும் விமானப் பயணத்தை தூண்டுகிறது, உள்நாட்டு நகரங்களுக்கிடையேயான விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 793.48 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 760.93 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை 4.28சதவீதம் அதிகரித்துள்ளது என்று விமான ஆணையரகம் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மாதவாரியாக கணக்கிட்டால், ஒரு மாதத்துக்கு 5.76 சதவீதம் பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.

விமான பயணத்தில் பயணிகள் வருகை பதிவில் மற்ற விமான நிலையங்களை காட்டிலும் சென்னை பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் ஒட்டுமொத்தமாக 18,43,337 பேர் சென்னை விமான நிலையம் வந்து சென்றுள்ளனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் சர்வதேச விமான நிலையங்களில் திருச்சி முக்கிய இடத்தை வகிக்கிறது. திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 11-ந் தேதி அதாவது ஒரு நாள் மட்டும் 7ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சி வந்த விமான பயணி ஒருவர் கூறும்போது,

திருச்சியில் உள்ள எனது மகனை பார்ப்பதற்காக கடந்த 26-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 8.40 மணி விமானத்தில் திருச்சி சென்றேன்.

பயணத்தின்போது விமானத்திற்குள் கடைப்பிடிக்க வேண்டியது குறித்தும், அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டியது குறித்தும் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் குறித்தும் அறிவிப்பு செய்தார்கள்.

ஆனால் அந்த அறிவிப்புகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தது. மேலும் இருக்கையில் ஒட்டியுள்ள அறிவிப்பு ஸ்டிக்கரிலும் தமிழ் இல்லை.

எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏனென்றால் தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. அருகில் அமர்ந்திருந்தவரிடம் தயக்கத்துடன் கேட்டு தெரிந்து கொண்டேன். விமானத்தில் மட்டுமல்ல, விமான நிலையத்திலும் இதே நிலைமைதான் உள்ளது.

இந்தி, ஆங்கிலத்தில் செய்த அறிவிப்பை குறை சொல்லவில்லை. தமிழகத்திற்குள் இயக்கப்படும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு இருந்தால் என்னை போன்று பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த அறிவிப்பை கேட்டுக் கொண்டே தினந்தோறும் விமானத்தில் பயணம் செய்யும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என் போன்றவர்களின் மனக்குமுறலை மனதில் வைத்து, தமிழகத்திற்குள் இயக்கப்படும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக அமையும் என்றார்.

Tags:    

Similar News