தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை கருத்து: நான் அப்படி பேசவே இல்லை என அந்தர்பல்டி அடித்த கஸ்தூரி- வீடியோ
- அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று கஸ்தூரி பேசியது சர்ச்சையானது
- என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர் என்று கஸ்தூரி ஆதங்கம்.
பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யாருங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." எனப் பேசினார்.
தெலுங்கு பேசுபவர்களை நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதாக சர்ச்சை வெடிக்க இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. தனது பேச்சை திரித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தெலுங்கு இனம், தெலுங்கு மக்கள் என்ற சொல்லை நான் கூறவில்லை. தெலுங்கு மக்களை நான் மிகவும் மதிப்பவள். என் பிள்ளைகளும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர்.
நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். என்னுடைய நண்பர்கள் என நான் நினைத்த பலரே எனக்கு எதிராக பேசுகின்றனர்" என்று தெரிவித்தார்.
அப்போது கஸ்தூரியிடம் குறுக்கிட்டு பேசிய பத்திரிகையாளர் ஒருவர், "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தப்புரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள்" என்று நீங்கள் பேசியதாக கூறினார்.
அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, அப்படி எதுவும் தான் சொல்லவில்லை என்று மறுத்து பேசினார். நேற்று தெலுங்கு மக்களை இழிவுபடுத்தி பேசிவிட்டு இன்று கஸ்தூரி அப்படி எதுவும் தான் பேசவில்லை என்று மாற்றிப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஸ்தூரி நேற்று தெலுங்கர்களை இழிவாக பேசிவிட்டு இன்று அப்படி பேசவே இல்லை என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.