மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 18 நாட்களில் 7 அடி குறைந்தது
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம்113.24 அடியாக இருந்தது.
- தற்போது அணையில் 83.09 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை 3 முறை நிரம்பியது. கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி இரவு அணை 3-வது முறையாக 120 அடியை எட்டி கடல் போல் காட்சி அளித்தது.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. அதே நேரம் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்ததால் அதிகபட்சமாக 12 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரும் நிறுத்தப்பட்டது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் கடந்த 18 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 7 அடி குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம்113.24 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 129 கனஅடி தண்ணீரே வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 83.09 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.