தமிழ்நாடு

தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- தி.மு.க., நா.த.க. வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்பு

Published On 2025-01-18 12:18 IST   |   Update On 2025-01-18 12:58:00 IST
  • ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
  • வரும் பிப்ரவரி 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

இறுதி நாளான நேற்று தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்றாக அவரது மனைவி அமுதா மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியும் மனு தாக்கல் செய்தார். இதேபோல் சிறிய அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தத்தில் 58 வேட்பாளர்கள் 65 வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 4 மனுக்கள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்கள் என கூடுதலாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் சொத்து மதிப்பு ரூ.2.56 கோடி ரூபாய் என காண்பிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று காலை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிஷ், கிழக்கு தொகுதி பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா ஆகியோர் தலைமையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது பிரதிநிதிகள் உடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தனது பிரதிநிதிகள் உடன் வந்திருந்தார்.

தி.மு.க சார்பில் சந்திரகுமார் வரவில்லை. அவர்களது பிரதிநிதிகள் வந்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் மனு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்தார். மதியம் 12.30 நிலவரப்படி மேலும் 20 சுயேச்சை வேட்பாளர்களில் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பிறகு எவ்வளவு மனுக்கள் ஏற்கப்பட்டது என்ற முழுமையான விபரம் தெரியவரும் என்ற அதிகாரிகள் தெரிவித்தனர். தகுதியில்லாத சில மனுக்களை அலுவலர் நிராகரித்தார். இதைத்தொடர்ந்து வரும் 20-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கேட்டால் அவர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்காக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பதற்றமான 9 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வருகிற பிப்ரவரி 8-ந் தேதி (சனிக்கிழமை) சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. அன்று மதியம் முடிவுகள் தெரிந்துவிடும்.

Tags:    

Similar News