தமிழ்நாடு

ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு

Published On 2025-01-18 12:33 IST   |   Update On 2025-01-18 12:33:00 IST
  • சோளமுத்து மற்றும் பெரியக்காள் ஆகிய 2 பேரை தாக்கியுள்ளனர்.
  • இரண்டு சமூகத்திற்கு இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க அமைதி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது கவுண்டம்பாளையம். இந்த ஊரைச் சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் கடந்த வியாழக்கிழமை இன்னொரு சமூகத்தினர் வசிக்கும் சாலையின் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை பார்த்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வேகத்தடை உள்ளது மெதுவாக செல்லுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. அப்போது இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது இரு சமூகத்தினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் சோளமுத்து மற்றும் பெரியக்காள் ஆகிய 2 பேரை தாக்கியுள்ளனர். மேலும் சோளமுத்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயம் அடைந்த சோளமுத்து மற்றும் பெரியக்காள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து நடவடிக்கை எடுக்க கோரி சோளமுத்து மற்றும் பெரியக்காள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணைபோலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் காயம் அடைந்த பெரியக்காள் ராசிபுரம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராசிபுரம் போலீசார் சஞ்சய் (23) மணிகண்டன்(25) உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர இரண்டு சமூகத்திற்கு இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க அமைதி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News