தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை யாராலும் புகுத்த முடியாது- அமைச்சர் பொன்முடி
- தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும்.
- மத்திய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதலமைச்சரே தெரிவித்து உள்ளார்.
விழுப்புரம்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விழுப்புரத்தில் 23 மருந்தகங்களை திறக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் புதுவை சாலை, சாலை அகரத்தில் கூட்டுறவு முதல்வர் மருந்தகத்தினை வனத்துறை அமைச்சரும் மாநில தி.மு.க. துணை பொது செயலாளருமான பொன்முடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், வன்னியர் அறக்கட்டளை உறுப்பினருமான அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கோலியனூர் சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
மருந்தக விற்பனையை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும். அதை யாராலும் அசைக்க முடியாது. மும்மொழி கொள்கையை தமிழகத்தில் யாராலும் புகுத்த முடியாது. மத்திய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதலமைச்சரே தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.