எதிர்ப்புக்கு மத்தியில் பொறுப்புக்கு வந்தால் செயல்பட முடியாது- முகுந்தன் விலகிக்கொள்ள முடிவு?
- பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ம.க. தலைவர் அன்புமணி இன்று சந்தித்து பேச உள்ளார்.
- தனக்கு பொறுப்பு வழங்கப்பட்டது கட்சியினரிடையே வரவேற்பு இல்லை.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நேற்று நடைபெற்ற பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாசின் மகள் வழி பேரன் ஆவார்.
இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், ''இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள். மீண்டும் சொல்கிறேன். விருப்பம் இல்லாவிட்டால் செல்லலாம். இங்கு நான் சொல்வதைத்தான் கேட்கணும்'' என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறினார்.
தொடர்ந்து அந்த மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ம.க. தலைவர் அன்புமணி இன்று சந்தித்து பேச உள்ளார்.
இந்நிலையில் பா.ம.க. இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்ள முகுந்தன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனது தாத்தாவும் பா.ம.க. நிறுவனருமான ராமதாசை சந்தித்து தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ராமதாஸ் மேடையில் அறிவித்தபோதும் கைத்தட்டல்கள் பலமாக இல்லை. எதிர்ப்புக்கு மத்தியில் பொறுப்புக்கு வந்தால் செயல்பட முடியாது. தனக்கு பொறுப்பு வழங்கப்பட்டது கட்சியினரிடையே வரவேற்பு இல்லை என முகுந்தன் தரப்பில் எண்ணுவதாக தெரிய வந்துள்ளது.