தமிழ்நாடு

ஏழ்மை நிலை குறித்து சமூக வலைதளங்களில் பதிவு: மாணவிக்கு நேரில் சென்று உதவிய முரசொலி எம்.பி.

Published On 2025-03-15 13:05 IST   |   Update On 2025-03-15 13:06:00 IST
  • மாணவியின் ஏழ்மை நிலைமை அறிந்த முரசொலி எம்.பி., மாணவி நித்தியஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று விபரங்களை கேட்டறிந்தார்.
  • மாணவியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாக அவர் உறுதி அளித்தார்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சித்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நித்தியஸ்ரீ. இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வருகிறார்.

அவர் தாயார் இறந்த நிலையில், யானைக்கால் நோயால் பாதிப்படைந்த தந்தை ரெங்கசாமி 100 நாள் வேலைக்கு சென்று கிடைக்கும் வருவாயை கொண்டு ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருவதாகவும், தந்தை இரவில் சமைத்து தரும் உணவை உண்டும், மறுநாள் மதியம் தானும், தனது தம்பியும் பள்ளியில் மதிய உணவு சாப்பிடுவோம் எனவும், சிறு குடிசையில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிப்பதாகவும் தனது துயரத்தை சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து மாணவியின் ஏழ்மை நிலைமை அறிந்த முரசொலி எம்.பி. சித்துக்காட்டில் உள்ள மாணவி நித்தியஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று விபரங்களை கேட்டறிந்து மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் நிதியுதவி வழங்கினார்.

மேலும் அவரது வீட்டிற்கு மின் இணைப்பு கிடைத்திடவும், மாணவியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.

சமூக வலைதளத்தின் மூலம் தகவல் அறிந்து வீட்டிற்கே நேரில் உதவி செய்த முரசொலி எம்.பி.க்கு மாணவி நித்யஸ்ரீ நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News