தமிழ்நாடு

சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்குமா?- செல்லூர் ராஜூ அளித்த பதில்

Published On 2025-03-15 11:49 IST   |   Update On 2025-03-15 11:49:00 IST
  • எங்களின் ஒரே அரசியல் எதிரி தி.மு.க. தான்.
  • தி.மு.க. உடைத்தால் மண்குடம். நாங்கள் உடைத்தால் பொன் குடமா?

மதுரை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் ஒருபோதும் அ.தி.மு.க. கூட்டணி அமைக்காது என்று கூறி வந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இது அரசியல் களத்தில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் மனமாற்றம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறி இருக்கிறார். அதில் எந்த தவறும் இல்லை. எங்களின் தலைவர் புரட்சித்தலைவி அம்மா தி.மு.க. என்ற தீய சக்தியை ஒழிக்க உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை லட்சியத்தோடு வளர்த்தார்.

எங்களின் ஒரே அரசியல் எதிரி தி.மு.க. தான். அன்றைக்கு காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியை முறித்தபோது இனியொரு போதும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை. அப்படி கூட்டணி வைத்தால் அது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்று கருணாநிதி கூறினார். ஆனால் அதே கருணாநிதி தான் சொன்னதையும் மீறி காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டார் .

தி.மு.க. உடைத்தால் மண்குடம். நாங்கள் உடைத்தால் பொன் குடமா? தற்கொலைக்கு சமம் என்று சொன்ன கருணாநிதியே தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு காங்கிரசுடன் கூட்டணி வைத்தார். அந்த அளவுக்கு கூட எங்கள் அண்ணன் (எடப்பாடியார்) இப்போது தெரிவிக்கவில்லை. எனவே தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

செல்லூர் ராஜூவின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News